சிதம்பரத்தில் விவசாயிகள் போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சிதம்பரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரே காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். காவிரி டெல்டா பாசன தலைவர் இளங்கீரன் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும், தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் செத்துமடிவதை விளக்கும் வகையில், போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவருக்கு மாலை அணிவித்து அமர வைத்திருந்தனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தமிழ்வாணன், விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ஸ்டாலின் மணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச்செயலாளர் கற்பனைச்செல்வம், கான்சாகிப் பாசனவாய்க்கால் சங்க செயலாளர் கண்ணன், துணை செயலாளர் ஹாஜா மொய்தீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.