கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்


கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x

நம்பியூர் அருகே கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கீழ்பவானி வாய்க்கால்

கீழ்பவானி வாய்க்கால் பவானிசாகர் அணையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரு கரைகளிலும் முழுக்க மண்ணால் கட்டப்பட்டது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை மற்றும் ஜனவரி 1-ந் தேதி முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரை என 2 முறை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கான்கிரீட் தளத்துக்கு எதிர்ப்பு

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு கீழ்பவானி கால்வாயின் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முயன்றது. இந்த திட்டத்தை தொடங்கினால் கீழ்பவானி பாசன பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டல் கடுமையாக பாதிக்கும் என கூறி ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தற்காலிகமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 1-ந் தேதி அன்று மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் மற்றும் பக்கவாட்டு சுவர் அமைக்க அரசு திட்டமிட்டது. இதுகுறித்த அறிந்த அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாய்க்காலில் இறங்கி...

மேலும் நேற்று காலையில் நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கரும்பு, தேங்காய், வாழைத்தாருடன் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அதற்கான அரசாணையை வருகிற 10-ந் தேதி வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் வருகிற 11-ந் தேதி ஈரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிடுவோம். மேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து வருகிற 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புறக்கணிப்போம்' என்றனர்.


Next Story