விவசாயிகள்,பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
விவசாயிகள்,பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பேரூர்
ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை தடுக்ககோரி தொண்டாமுத்தூர் அருகே பரமேஸ்வரன்பாளையத்தில் விவசாயிகள், பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் சாலை மறியல்
கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குட்பட்ட பகுதியான நரசீபுரம், தேவராயபும், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில், காட்டு யானைகள், கடந்த சில தினங்களாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து, விவசாய நிலங்களில் புகுந்து 5-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகளை சூறையாடியது. மேலும், இரவு நேரங்களில் காட்டுயானைகள் ஊர் மற்றும் குடியிருப்புக்குள் சர்வசாதாரணமாக உலா வருவது அதிகரித்துள்ளது. இதனால், பெரும் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரன்பாளையம் ஊர் மக்கள் மற்றும் இப்பகுதி விவசாயிகள், காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கோரியும், இதற்கு நடவடிக்கை எடுக்காத வனத்துறையைக் கண்டித்தும் நேற்று காலை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோஷம் எழுப்பினர்
அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள் பலமுறை தொடர்ச்சியாக யானை ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த தவறியதாக வனத்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்து பேரூர்போலீஸ் துணை சூப்பிரண்டு திருமால் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, வனத்துறை அதிகாரிகள் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இதற்கு உடனடியாக இங்கு நேரில் வந்து மாவட்ட வன அலுவலர் உறுதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து, வனத்துறை மாவட்ட துணை அலுவலர் தினேஷ் மற்றும் வனத்துறை அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் இறுதியில், மறியலில் ஈடுபட்டவர்களுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென, வனத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக, நேற்று காலை நரசீபுரம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
------------------