விவசாயிகள் 15-வது தவணை பெற ஆதார் விவரங்களை இணைக்க வேண்டுகோள்
விவசாயிகள் 15-வது தவணை பெற ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் திட்டப்பயனாளிகள் 15-வது தவணை தொகையை தொடர்ந்து பெற தங்களது ஆதார் விவரங்களை (இ-கேஒய்சி) பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தங்கள் வங்கி கணக்கை நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாற்றம் செய்திட வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளில் ரூ.2,000 வீதம் மொத்தமாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15-வது தவணை பி.எம்.கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களது வங்கி கணக்கினை நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாற்றம் செய்திட வேண்டும். தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய தவறிய மற்றும் வங்கி கணக்கினை நேரடி பணபரிமாற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 15-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவசாயிகள் தாமாகவே பி.எம்.கிசான் செயலி மூலம் முக அடையாளத்தை பயன்படுத்தி இ-கேஒய்சி செய்து கொள்ளலாம். நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக வங்கி கணக்கினை மாற்றுவதற்கு தங்களது வங்கி கணக்கு உள்ள சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகி மேற்கூறிய செயல்முறையை செய்திட அறிவுறுத்தப்படுகிறது. அல்லது இந்தியா போஸ்ட் வங்கிகளை அணுகி அவ்வங்கிகளில் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 9,452 பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். மேலும் 3,964 பயனாளிகள் நேரடி பணப்பரிமாற்ற முறைக்கு தங்கள் வங்கி கணக்கு மாற்றாமல் உள்ளனர். மேற்கூறிய குறைபாடுகளை சரிசெய்து விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டப்பலனை தொடர்ந்து பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.