கலசப்பாக்கம் அருகே விவசாயிகள் சாலை மறியல்
கலசப்பாக்கம் அருகே யூரியா கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசப்பாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், புதுப்பாளையம் துரிஞ்சாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த கால்நடை வளர்ப்பிலும் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவில் கடந்த ஆறு மாதங்களாக அதிக அளவு மழை பெய்து ஏரி, குளம், குட்டை மற்றும் அணைகளில் நீர் நிரம்பி உள்ளது.
இதனை பயன்படுத்தி விவசாயிகள் மூன்று போகமும் பயிர் செய்து வருகின்றனர். இதனால் யூரியா தேவை அதிகரித்து உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக கலசப்பாக்கம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் சென்று யூரியா கேட்கும்போது, அதிகாரிகள் ஸ்டாக் இல்லை என தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் இன்று மதியம் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகே பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் அனைவரும் திடீரென ரோட்டில் படுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.