பசுமையான தமிழகத்தை உருவாக்க விவசாயிகள் முன்வர வேண்டும்


பசுமையான தமிழகத்தை உருவாக்க விவசாயிகள் முன்வர வேண்டும்
x

அதிகளவில் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையான தமிழகத்தை உருவாக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்து பேசினார்

விழுப்புரம்

விழுப்புரம்,

விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்

விழுப்புரத்தில் நேற்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். கூடுதல் தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் நாகநாதன், எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, மணிக்கண்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையத் முஜம்மில் அப்பாஸ் திட்ட விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்ததோடு வனவிலங்குகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 25 விவசாயிகளுக்கு ரூ.1.57 லட்சம் நிவாரண உதவித்தொகையும், பசுமை தாயகம் திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

பசுமையான தமிழகம்

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் 11.7 சதவீதமாக உள்ள வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றால் அரசுக்கு சொந்தமான இடம், விவசாய நிலங்கள் உள்ள பகுதிகள், தரிசு நிலங்கள், நெடுஞ்சாலைகள், பள்ளிக்கூடங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தால் மட்டுமே வனத்தினை பாதுகாப்பதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். எனவே விவசாயிகள் தங்கள் பகுதிகளில் எந்த வகையான மரக்கன்றுகள் நட்டால் பலன் தருமோ அந்த மரக்கன்றுகளை வழங்குவதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.

பாம்புகள், காட்டுபன்றிகள்

மேலும் பசுமையான தமிழகத்தை உருவாக்க விவசாயிகள் அதிகளவு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இங்குள்ள விவசாயிகளின் மிகப்பெரிய கோரிக்கை, குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். மாவட்ட வனத்துறையின் மூலம் குரங்குகள் பிடிக்கப்பட்டு வனங்களில் விடப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்.

விவசாய நிலங்களில் பாம்புகள், காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த வனத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படாதவாறு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வனங்களை பாதுகாக்க

அதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசும்போது சாலை வசதியை மேம்படுத்துவதற்காக சில இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் இருப்பதால் மத்திய அரசிடம் அனுமதி பெற்றே நாம் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே உரிய அனுமதியை பெற்று சாலை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். விவசாயிகள், அரசால் வழங்கும் மரக்கன்றுகளை தங்களுக்கு சொந்தமான இடங்கள், விளைநிலங்களுக்கு அருகில், தரிசு நிலங்கள் உள்ளிட்டவற்றில் நடவு செய்து பசுமை தமிழகத்தை உருவாக்க முன்வர வேண்டும். வனங்கள் இருந்தால்தான் நல்ல சுத்தமான காற்று மற்றும் மழைநீர் அதிகளவு கிடைக்கப்பெறும். எனவே நாம் அனைவரும் வனங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும் என்றார்.

அணைக்கட்டு

முன்னதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில்,மரக்காணம் பகுதியில் வனநிலம் அதிகமாக உள்ளதால் இப்பகுதியில் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என ஆய்வு மேற்கொண்டோம். வனப்பகுதிக்கு சொந்தமான இடத்திலிருந்து மழைநீர் கரைபுரண்டு வீணாக கடலில் கலக்கிறது. அதனை தடுத்திடும் பொருட்டு ஒரு சிறிய அணைக்கட்டு மூலமாக தேக்கி நீர் ஆதாரத்தினை பெருக்க உதவிட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாப்பு அலுவலர் கருணைப்பிரியா, மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் கீதாஞ்சலி, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story