போலி உரங்களை வாங்கி விவசாயிகள் ஏமாற வேண்டாம்


போலி உரங்களை வாங்கி விவசாயிகள் ஏமாற வேண்டாம்
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:47 PM GMT)

போலி உரங்களை வாங்கி விவசாயிகள் ஏமாற வேண்டாம் என்று ராமநாதபுரம் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம்

போலி உரங்களை வாங்கி விவசாயிகள் ஏமாற வேண்டாம் என்று ராமநாதபுரம் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

உரங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி சுமார் 1.85 லட்சம் எக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 291 மி.மீ மழை பெய்துள்ளது. செப்டம்பரில் 42 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு சம்பா பருவ சாகுபடி தொடங்கப்பட்டு விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யும் போது அடி உரம் மேலுரம் இடவேண்டும். பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள், உர உரிமம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய சட்டம், உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய உரங்கள் விற்பனை வேளாண்மை அலுவலர்கள், உர ஆய்வாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏமாற வேண்டாம்

மாவட்டத்தில் 128 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 140 தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமாக மானிய உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது யூரியா 3400 மெ.டன், டி.ஏ.பி. 2309 மெ.டன், பொட்டாஷ் 118 மெ.டன், காம்ப்ளக்ஸ் 1703 மெ.டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 59 மெ.டன் உரங்கள் இருப்பு உள்ளது. விவசாயிகளின் அறியாமை மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு போலி உரங்கள் சில கிராமங்களில் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது.

இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அத்தியாவசியமான மற்றும் மானிய உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. எனவே, விவசாயிகள் போலி உரங்களை வாங்கி ஏமாறாமல், அதை தவிர்த்து உர உரிமம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்களை பெற்று பயன்பெற வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

போலி உரங்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே மாவட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள், வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story