விவசாயிகள் செய்துள்ள சாகுபடிக்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில் கூடுதல் கடன் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்


விவசாயிகள் செய்துள்ள சாகுபடிக்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில் கூடுதல் கடன் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
x

விவசாயிகள் செய்துள்ள சாகுபடிக்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில் கூடுதல் கடன் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த வருடம் மேட்டூர் அணையில் வழக்கமாக திறக்கப்படும் தேதிக்கு முன்னரே குருவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் வழக்கத்திற்கு அதிகமான ஏக்கரில் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

வழக்கமாக 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள், இந்த வருடம் 14 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய பணிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்கிறார்களோ, அத்தனை ஏக்கருக்கும் கடன் கொடுக்க வேண்டும். மேலும், விவசாய நிலங்கள் அதிகரிப்பிற்கு ஏற்ப அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அளவு, விவசாயிகளுக்கு சிரமம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் திறந்து அவர்களின் நலன் காக்க வேண்டும்.

மேலும், தற்பொழுது மழைக் காலமாக இருப்பதால், நெல் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சிமெண்ட் களம் அமைத்து விவசாயிகள் கொண்டுவரும் நெல்களை பாதுகாக்கவும், மேலும் மழை நேரங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் இருப்பதற்கு தேவையான தார்பாய்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story