விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்


விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
x

வந்தவாசியில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.

மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அ.ஸ்ரீதர், வேளாண்மை அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

அப்போது பதிலளிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கூட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வராததை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறை வந்தவாசி உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது அவர்களை கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து கோட்டை மூலை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அனுமதி கேட்டு நகராட்சி கடிதம் அனுப்பினால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.


Next Story