அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் தர்ணா
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பேரையூர்,
குறை தீர்க்கும் கூட்டம்
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பேரையூர் பகுதியில் குதிரைவாலி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் 30 நாட்களுக்கு பின்பு குதிரைவாலி பயிர் புற்களாக முளைத்து உள்ளன என்று புகார் செய்தனர். தற்போது சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு யூரியா உரம் கூட்டுறவு சங்கங்களில் கிடைப்பதில்லை என்றும், தனியார் உரக்கடைகளில் யூரியா உரம் வாங்கினால், ஆர்கானிக் உரம் உள்ள வாளியும் வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர் என்று பேசினார்கள்.
தர்ணா
இதை தொடர்ந்து விவசாயிகள் கூட்டத்துக்கு பெரும்பாலான துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வருவதில்லை என்றும், உண்மையான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாலுகா அலுவலக வராண்டாவில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் ரவிச்சந்திரன் அவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தில் கலந்து கொள்ள செய்தார். இது தொடர்பாக உள்ளே உட்கார்ந்து இருந்த விவசாயிகள் மத்தியில் கூச்சல் குழப்பம் நிலவியது.பின்னர் தொடர்ந்து அதிகாரிகள் வராததை கண்டித்து பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்து குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த குறைவான எண்ணிக்கையில் இருந்த விவசாயிகளை கொண்டு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது, குதிரைவாலி பயிரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் செய்யலாம்.அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது கூட்டுறவு சங்க போராட்டம் முடிந்த பின்பு போதிய அளவில் கூட்டுறவு சங்கம் மூலம் யூரியா உரம் கிடைக்கும் என்று கூறினார்கள்.