விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்; கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு


விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்; கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு
x

கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

நெல்லையை அடுத்த மேலக்கல்லூரில் கோடகன் கால்வாய் நேரடி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர் கல்லூர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.

பாபநாசம் அணையில் இருந்து பிரியும் 5-வது கால்வாயான கோடகன் கால்வாயின் நேரடி ஆயக்கட்டு பாசனத்தின் மூலம் 3,300 ஏக்கர் பரப்பளவிலும், குளத்து பாசனம் மூலம் 3000 ஏக்கர் பரப்பளவிலும் நெல், வாழை போன்றவை பயிரிடப்பட்டு வருகிறது. கார் சாகுபடிக்கு கடந்த மாதம் கோடகன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டிய சூழ்நிலையில் இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருக்கும் 4 மாத பயிரான வாழை, 600 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டிருக்கும் நெற்பயிர் மற்றும் 1,500 ஏக்கர் பரப்பளவிற்கு நடுவதற்காக நாற்றுப் பாவப்பட்ட நிலையில் உள்ள பயிர்கள் கருகி நாசமாகும் நிலை இருப்பதாக கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விவசாயிகள் வாழ்வாதாரம்

அணைக்கட்டில் 50 அடிக்கும் குறைவாக தண்ணீர் இருந்த நிலையிலும் கோடகன் கால்வாயில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது 70 அடிக்கும் மேலும் தண்ணீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலை நிடித்தால் ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் 9, 10-வது வட, தென்தலை பாசன கால்வாய் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதேபோல் பாளையங்கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முற்றுகையிட முடிவு

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையெனில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பாசன விவசாயிகள் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story