விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆவுடையார்ேகாவிலில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வறட்சி நிவாரண தொகையானது மிகவும் குறைவாக உள்ளது என்றும், அதனை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். சாகுபடி ஆரம்பிக்க இருக்கின்ற சமயத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் நெல் விதைகளை தடையில்லாமலும், தரமானதாகவும் வழங்க வேண்டும். ஆவுடையார்கோவில் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தி கரையை உயர்த்த வேண்டும். பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஆவுடையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, அதன் கரைகளை உயர்த்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்து, ஒன்றிய துணை தலைவர் வேலு, விவசாய சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேவுகப்பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெபமாலை பிச்சை, விவசாய ஒன்றிய குழு இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.