குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு


குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு
x

வந்தவாசியில் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசியில் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ஒழுங்குமுறை விற்பனைகூட கிடங்கு கட்டிடத்தில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துணை இயக்குனர் (தணிக்கை துறை) யுவராஜ் தலைமை தாங்கினார். வந்தவாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுபாஷ்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி.வெங்கடேசன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். காட்டு பன்றிகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையினால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுப்பணி துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் முழு கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் பேசினர்.

கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். பழைய நடைமுறைப்படி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் காலதாமதமின்றி விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்பேசினர்.

இதில் உதவி இயக்குநர் (வேளாண்) அன்பழகன், துணை வேளாண் அலுவலர் அரிபுத்திரன், தாசில்தார் எஸ்.சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.சாப்ஜான், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மரியதேவ் ஆனந்த் உள்பட வேளாண்மை சார்ந்த அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் கீதா வரவேற்றார்.

கூட்டத்தில் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட குறைபாடுகள் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முள்ளிப்பட்டு கூட்ரோட்டில் அமைந்துள்ள அர்ஜுனன் குளத்தை சீரமைக்க வேண்டும். மேலும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சம்பந்தமாக மனு கொடுத்து நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக விரைந்து முடிக்க ேவண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

அதைத் தொடர்ந்து அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி, ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story