குறைதீர்க்கும் கூட்டத்தில் வனத்துறையை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு


குறைதீர்க்கும் கூட்டத்தில் வனத்துறையை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
x

குடியாத்தத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் வனத்துறையை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

வேலூர்

குடியாத்தத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் வனத்துறையை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

குறைதீர்வு கூட்டம்

குடியாத்தம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை துறை, வனத்துறை, மின்வாரியத்துறை, கால்நடைத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார்.

கூட்டம் தொடங்கியவுடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எழுந்து, ''பேரணாம்பட்டு பகுதியில் உள்ள சாரங்கல் பகுதியில் யானைகள் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பல கூட்டங்களில் கூறியும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வனச்சரக அதிகாரி அதிகாரி வருவதில்லை.

விவசாய நிலங்களுக்குள் யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் கூறினர். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவ்கள் வெளிநடப்பு செய்தனர்.

சமரசம்

அப்போது உதவி கலெக்டர் வெங்கட்ராமன், ஓரிரு நாளில் பேரணாம்பட்டு பகுதி விவசாயிகள் பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று வனத்துறையினரை அழைத்து விளை நிலங்களுக்குள் யானைகள் புகுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார். இதில் சமரசம் அடைந்த விவசாயிகள் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள் மேல்பட்டி பகுதியில் வாரச்சந்தைக்கு உள்ள இடத்தில் கடைகள் அமைக்காமல் சாலையில் கடைகள் அமைப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கிறது. எனவே வார சந்தையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகள் அமைக்க வேண்டும்.

பல லட்சம் ரூபாய் நஷ்டம்

இரண்டு நாட்களுக்கு முன்பு குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளியுடன் பெய்த கனமழையால் வாழை, தென்னை நெல் உள்ளிட்ட பயிர்கள் பெருத்த சேதம் அடைந்து விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக உரிய கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போது் மாங்காய் காய்க்கும் சீசன் என்பதால் தற்போது பூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளது. உடனடியாக வேளாண்மை துறை அதிகாரிகள் பிரச்சினை குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும்.

உரங்களை பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் வெங்கட்ராமன் உறுதி அளித்தார்.


Next Story