முறையீட்டு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


முறையீட்டு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் வராததால் முறையீட்டு குழு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரி கூட்டத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் வராததால் முறையீட்டு குழு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரி கூட்டத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் வெளிநடப்பு

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் முறையீட்டு குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விவசாயிகள் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் சப்-கலெக்டர் வரவில்லை. அவரது நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் கூட்டத்தை நடத்தினார். அப்போது ஏன் சப்-கலெக்டர் வரவில்லை என்று விவசாயிகள் கேட்டனர். மேலும் சப்-கலெக்டர் வேறு கூட்டத்திற்கு சென்றிருந்தால் முறையீட்டு குழு கூட்டத்தை தள்ளி வைத்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். அப்போது நேர்முக உதவியாளர், சில விவசாயிகள் மட்டும் தான் பிரச்சினை செய்கின்றனர் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் சில விவசாயிகள் மட்டும் கூட்டரங்கிற்குள் இருந்தனர். அவர்களை வைத்து கூட்டத்தை நடத்தி முடித்தனர்.

எந்த பயனும் இல்லை

இந்த நிலையில் பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் இருக்கைகள் காலியாக கிடந்தன. இதன் காரணமாக சப்-கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயிகள் முறையீட்டு குழு கூட்டம் சப்-கலெக்டர் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஏற்கனவே சப்-கலெக்டர் கலந்துகொண்ட கூட்டங்களில் தெரிவித்த கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையில் சப்-கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்தினால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன் சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், துணை தாசில்தார்தான் கூட்டம் நடத்தினார்.

25 மனுக்கள்

சப்-கலெக்டர் கூட்டத்திற்கு வர முடியாது என்றால் வேறு ஒரு தேதிக்கு கூட்டத்தை தள்ளி வைத்து இருக்கலாம். தற்போது பொள்ளாச்சி பகுதியில் சுமார் 2 லட்சம் தென்னை மரங்கள் குறுத்தோலை தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற முக்கிய பிரச்சினைகள் உள்ளது. சப்-கலெக்டர் வராததால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து உள்ளோம். அடுத்த கூட்டத்திற்கு விவசாயிகளின் பிரச்சினைக்கு முடிவு எடுக்கும் வகையில் சப்-கலெக்டர் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் முறையீட்டு குழு கூட்டம் வழக்கம் போல் நடைபெற்றது. 25 விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன என்றனர்.

1 More update

Next Story