சமாதான கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு


சமாதான கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு
x

சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்கால் தூர்வாரும் பிரச்சினை தொடா்பாக நடந்த சமாதான கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். அப்போது அவர்கள் உதவி கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்கால் தூர்வாரும் பிரச்சினை தொடா்பாக நடந்த சமாதான கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். அப்போது அவர்கள் உதவி கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கழுமலையாறு பாசன வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலை நம்பி மேலத்தேனூர், கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, நெம்மேலி, ஆலஞ்சேரி, தாடாளன் கோவில், சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் சீர்காழி நகர் பகுதியில் வடி வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலை தூர்வார தமிழக அரசு ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு நடந்து வந்தது.

பிரச்சினை

இந்தநிலையில் விவசாயிகள் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புழுகாபேட்டையில் இருந்து விவசாயிகள் முன்னிலையில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது வாய்க்காலில் உள்ள மண் அருகில் உள்ள குடியிருப்புகளில் கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி, பொதுப்பணித்துறை மாவட்ட கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு முழுமையாக வாய்க்காலை தூர்வார கேட்டுக் கொண்டனர். அப்போது குடியிருப்பு வாசிகள் வாய்க்காலை அளந்து தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் மீண்டும் விவசாயிகளுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

வெளிநடப்பு

இதைத்தொடர்ந்து நேற்று சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள், குடியிருப்பு வாசிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் சமாதான கூட்டம் உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமையில் நடத்தப்பட வேண்டும், பாசன வாய்க்கால்களில் நகராட்சி பகுதிகளில் இருந்து கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை பாசன வாய்க்காலில் விடக்கூடாது, நகராட்சி ஆணையர், சீர்காழி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் உள்ளிட்டோர் முன்னிலையில் மீண்டும் சமாதான கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சமாதான கூட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.


Next Story