மழை வேண்டி கொடும்பாவி எரித்து சாலையில் இழுத்துச்சென்ற விவசாயிகள்


மழை வேண்டி கொடும்பாவி எரித்து சாலையில் இழுத்துச்சென்ற விவசாயிகள்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:45 PM GMT)

கருகும் சம்பா பயிரை காப்பாற்ற மழை வேண்டி திருத்துறைப்பூண்டி பகுதியில் கொடும்பாவி எரித்து விவசாயிகள் சாலையில் இழுத்துச்சென்றனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

கருகும் சம்பா பயிரை காப்பாற்ற மழை வேண்டி திருத்துறைப்பூண்டி பகுதியில் கொடும்பாவி எரித்து விவசாயிகள் சாலையில் இழுத்துச்சென்றனர்.

குறுவை சாகுபடி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள பகுதி. வேறு வருமானத்திற்கு இந்த பகுதியில் எந்த தொழிலும் கிடையாது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தமிழக அரசு தண்ணீர் திறந்தாலும், இந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. மேலும் கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரும் திறந்து விடவில்லை.

இதனால் குறுவை பயிர் சாகுபடி செய்த விவசாயிகளின் நிலத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகின. இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து சம்பா சாகுபடியாவது காப்பாற்றும் என்று வாய்க்கால் மற்றும் குளங்களில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்து இரண்டாவது முறையாக சம்பா சாகுபடி செய்தனர்.

பயிர்கள் கருக தொடங்கின

இப்போது சம்பா சாகுபடியும் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் விவசாய சங்கத்தினர், விவசாய தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 20 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், மழை பெய்யாததாலும் தண்ணீர் இன்றி தற்போது சம்பா பயிர்கள் கருக தொடங்கியுள்ளன. மழையின்றி வாடும் நேரங்களில் வருண பகவானிடம் மழை வேண்டி களிமண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்று நடுவே தீச்சட்டி வைத்து எரித்து ஒப்பாரி வைத்து தெருத்தெருவாக இழுத்துச்சென்று வழிபட்டால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

கொடும்பாவி எரித்து வழிபாடு

அதன்படி திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பகுதியில் விவசாயிகள் வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி நெடும்பலம் பகுதியில் தொடங்கி அண்ணா நகர், பட்டுக்கோட்டை சாலை, வேதாரண்யம் சாலை, காசுக்கடை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நகர் பகுதிகளிலும் கொடும்பாவி எரித்து ஒப்பாரி வைத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

காவிரியில் தண்ணீர் வராத நிலையில் தற்போது மழை பெய்தால் பயிரை காப்பாற்றி விடலாம் என்ற முயற்சியில் தற்போது வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி கொடும்பாவி கட்டி நூதன முறையில் விவசாயிகள் வழிபட்டு வருகின்றனர்.


Next Story