முன்கூட்டியே குறுவை அறுவடை செய்யும் விவசாயிகள்


தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை அறுவடை பணிகளை விவசாயிகள் முன்கூட்டியே மேற்கொண்டு வருகிறார்கள். அறுவடை செய்த நெல்லை சாலையோரங்களில் குவித்து வைத்து காய வைக்கும்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர்

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

அதன்படி இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 1 லட்சத்து 8 ஆயிரத்து 951 ஏக்கரை விட அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. இதில் முன்பட்ட குறுவை அறுவடை முடிந்து விட்டது. தற்போது ஆற்று நீரை நம்பி சாகுபடி செய்த வயல்களில் பெரும்பாலான ஏக்கர்களில் நெற்பயிர்கள் கருகி விட்டன.

அறுவடை பணிகள் தீவிரம்

ஒரு சில பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பம்புசெட் மூலம் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இன்னும் ஒரு வாரம் கழித்து தான் குறுவை அறுவடைக்கு வரும் நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் தொடர்ந்து ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அறுவடை எந்திரம் வயல்களில் இறங்குவதற்கு சிரமம் ஆகி விடும். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மகசூல் குறைந்துள்ள நிலையில், மழையினாலும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அறுவடை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

சாலைகளில் காய வைக்கும் பணி

அவ்வாறு அறுவடை செய்த நெல்மணிகளை சாலையோரங்களில் குவித்து வைத்து காய வைக்கும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை- மன்னார்குடி சாலை, தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை, தஞ்சை புறவழிச்சாலை, தஞ்சை- நாகை சாலை உள்ளிட்ட சாலைகளிலும் ஆங்காங்கே விவசாயிகள் நெல்மணிகளை குவியல், குவியலாக குவித்து வைத்து காய வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள வயல்களில் நெல்லை எளிதில் அறுவடை செய்து விடலாம். ஆனால் சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ள வயல்களுக்கு அறுவடை எந்திரம் கொண்டு செல்லப்பட்டு அறுவடை செய்வது என்பது சிரமமாகி விடும். இதனால் தான் அறுவடைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் முன்கூட்டியே அறுவடை செய்து வருகிறோம். இவ்வாறு அறுவடை செய்வதால் நெல் மகசூலும் இழப்பு ஏற்படும். ஆனால் மழையினால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் மகசூல் இழப்பு பற்றி கவலைப்படாமல் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.என்றனர்.


Next Story