நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்யும் விவசாயிகள்


நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்யும் விவசாயிகள்
x

குடியாத்தம் அருகே காட்டு யானைகளுக்கு பயந்து விவசாயிகள் நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்து வருகின்றனர்.

வேலூர்

பயிர்கள் சேதம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. ஏராளமான விவசாயிகள் விளைநிலங்களில் பயிர் செய்து வருகின்றனர். இந்த விளை நிலங்களுக்குள் இரவு மற்றும் அதிகாலை வேளையில் காட்டு யானைகள் புகுந்து நெல், வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.

ேலும் யானைகளை விரட்ட செல்லும் விவசாயிகளை அந்த யானைகள் துரத்தி வருவதால் உயிருக்கு அச்சப்பட்டு விவசாயிகள் யானைகள் அருகே செல்வதில்லை. இந்த நிலையில் பிச்சாண்டி என்பவருடைய நிலத்தில் நெற்பயிர்களையும், கோவர்தன் என்பவரது தக்காளி தோட்டத்தையும், தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

முன்னதாகவே அறுவடை

யானைகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் யானைகளுக்கு பயந்து முன்னதாகவே நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

யானைகளால் ஏற்படும் பயிர்கள் சேதம் பற்றி குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

யானைகளால் சேதம் அடையும் பயிர்களுக்கு வனத்துறையினர் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் விளை நிலங்களுக்குள் புகாவண்ணம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story