விவசாயியை கொன்ற மனைவி கைது
ராமநத்தம் அருகே விவசாயியை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பாலகிருஷ்ணன்(வயது 34). இவருடைய மனைவி ராதிகா(25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராதிகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த தினேஷ்(23) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை தனது கள்ளக்காதலன் தினேசுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதையடுத்து பாலகிருஷ்ணன் 3 முறையும் போலீசார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அதேபகுதியில் நிலத்தில் உள்ள வீட்டில் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி ராதிகா பாலகிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராதிகாவை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.