தர்மபுரியில்ஓட்டலில் பாஸ்ட்புட் சாப்பிட்ட பெண்ணுக்கு மயக்கம்உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை
நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 37). இவர் தனது குடும்பத்தினருடன் தர்மபுரி செந்தில் நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பாஸ்ட்புட் சாப்பிட்டார். பின்னர் காரில் சென்றபோது அவருக்கு உடலில் அரிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரமணன், நந்தகோபால் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று அங்கு ரேவதி மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்ட உணவு வகைகளின் மாதிரியை எடுத்து ஆய்வு செய்தனர். பின்னர் அதை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வின் முடிவு தெரிந்த பின்னரே ரேவதிக்கு அரிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட காரணம் என்ன? பாஸ்ட்புட் உணவில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என்பது குறித்து தகவல் தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.