ராட்டை சுற்றியும், நூல் நூற்றும் நெசவாளர்கள் உண்ணாவிரதம்


ராட்டை சுற்றியும், நூல் நூற்றும் நெசவாளர்கள் உண்ணாவிரதம்
x
திருப்பூர்


உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினத்தில் கைத்தறி நெசவாளர்கள் தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் காத்திடக் கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

கைத்தறி சேலை விற்பனை பாதிப்பு

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பாரம்பரிய தொழிலாக கைத்தறி நெசவு தொழில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்த தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நெசவுத் தொழிலின் மூலப்பொருட்களான பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவை விலை தற்போது நிலையாக இல்லாமல் ஏற்றம், இறக்கமாக உள்ளது.

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலை ரகங்கள் அனைத்தும் விசைத்தறிகளில் கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி அதிகமாக தயாரிக்கப்படுவதால் தற்போது கைத்தறி சேலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் இருந்து நெசவாளர்களை மீட்டு கொண்டு வர வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நேற்று நடைபெற்றது.

அப்போது நெசவாளர்களுக்கு தாலுகா வாரியாக தனி வங்கி ஏற்படுத்த வேண்டும், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறியீடுடன் 11 விசைத்தறியில் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது.

பார்டர் டிசைன் உடன் கூடிய பருத்திச்சேலை, பட்டுச்சேலை, கோராப்பட்டு, வேட்டி, துண்டு, லுங்கி, ஜமுக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடாது.

நூல் நூற்று

2007-ல் இருந்து 2013-ம் ஆண்டு நடைமுறையில் இருந்து வந்த கைத்தறி நெசவாளர் நலன் காப்பீடு திட்டம் மருத்துவ அட்டையை மீண்டும் இலவசமாக கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் குட்டை, வாளவாடி, இராமேகவுண்டன்புதூர், மலையாண்டிபட்டினம் பகுதிகளை ேசர்ந்த பொதுமக்கள் விநாயகர் கோவில் முன்பு காலை முதல் மாலை வரையிலும் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாரம்பரிய ராட்டை சுற்றியும், நூல்நூற்றும் கவனத்தை ஈர்த்தனர்.

உண்ணாவிரதத்தை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story