மதுபோதையில் மகன்-மகளுக்கு சூடுவைத்த தந்தை கைது
மதுபோதையில் மகன்-மகளுக்கு சூடுவைத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூரை கவுல்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35), கொத்தனார். இவர், கடந்த 2-ந்தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்து, 5-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் புகழினி (10), 3-ம் வகுப்பு படிக்கும் மகன் நித்திஷ் (8) ஆகியோரை தோசை கரண்டியால் சூடுவைத்தார். இதனை தட்டிக்கேட்ட அவரது மனைவி சரஸ்வதியை நடராஜன் மத்தால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகை சேர்ந்த குழுவினர் விசாரணை நடத்தினர். இதனிடையே தீக்காயம் அடைந்த புகழினி பெரம்பலூரில் உள்ள குழந்தைகள் அறக்கட்டளை மையத்தில் சேர்க்கப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சிறுவன் நித்திஷ் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டரிடம் காண்பித்து முதலுதவி சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெரம்பலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பெரம்பலூர் போலீசார் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.