சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுதகுதியானவர்கள் விண்ணப்பிக்க கடலூர் கலெக்டர் வேண்டுகோள்


சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுதகுதியானவர்கள் விண்ணப்பிக்க கடலூர் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 9:41 AM GMT)

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது " தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

2023-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றில் உள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருக்க வேண்டும். விருது பெறுவதற்கான விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், சுய விவரம் மற்றும் முழு முகவரி மற்றும் மேற்குறிப்பிட்ட தகுதிகள் உடையவராக இருந்தால், அதற்குரிய ஆதாரங்களை மெய்ப்பிக்கும் வகையில் ஆவணங்கள், புகைப்படங்கள், நிகழ்வுகள் குறித்த நாள், இடம் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட்டு 15.9.2023-க்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story