தனியார் கல்லூரி பஸ் மோதி தந்தை-மகன் பலி
கருமத்தம்பட்டி அருகே நடந்த விபத்தில் தனியார் கல்லூரி பஸ் மோதியதில் தந்தை-மகன் பலியானார்கள். நெஞ்சை பதை, பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி அருகே நடந்த விபத்தில் தனியார் கல்லூரி பஸ் மோதியதில் தந்தை-மகன் பலியானார்கள். நெஞ்சை பதை, பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பயங்கர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகாராயம்பாளையத்தை அடுத்த கணபதிபாளையம் நார்த்தங்காட்டை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 64), விவசாயி. இவருடைய மகன் நந்தகுமார் (34). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்ல முடிவு செய்தார். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதிக்குதான் வந்து பஸ் ஏற வேண்டும். இதற்காக தனது மகன் நந்தகுமாரை, மொபட்டில் வைத்துக்கொண்டு கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதியை நோக்கி தங்கவேல் வந்து கொண்டு இருந்தார்.
தனியார் கல்லூரி பஸ் மோதியது
அவர்கள் 2 பேரும் கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் 4 ரோடு பகுதிக்கு நேற்று அதிகாலை 5.55 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூரை நோக்கி பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான பஸ் அதிவேகமாக வந்தது.
பின்னர் அந்த பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் தந்தை-மகன் சென்ற மொபட் மீது வேகமாக மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்ததுடன் தரதரவென சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டனர். பின்னர் அந்த பஸ்சின் சக்கரம் அவர்கள் மீது ஏறியது. இதை பார்த்ததும் அந்த பஸ்சுக்குள் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர்.
தந்தை-மகன் பலி
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து நடந்தது காலை நேரம் என்பதால் அந்தப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இந்த விபத்தை பார்த்ததும் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பலியான தங்கவேல், நந்தகுமார் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ்சை ஓட்டிச்சென்ற பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் செல்வம் (60) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தங்கவேல், நந்தகுமார் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்ததும் அவருடைய உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் 2 பேரின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சை உருக்குவதுபோல இருந்தது.
வீடியோ வைரல்
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் வேகத்தடை இருக்கிறது. ஆனால் பஸ்சை ஓட்டி வந்தவர் அந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக வந்ததால்தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதை, பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.