விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையால் அச்சம்


விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையால் அச்சம்
x
தினத்தந்தி 27 Jun 2023 2:00 AM IST (Updated: 27 Jun 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-கோவை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையை உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-கோவை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையை உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர் விபத்துகள்

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்லும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் சேரன் நகர், வடக்கிபாளையம் பிரிவு பகுதிகள் வளைவானது. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேரன் நகர் பகுதியில் ஏற்கனவே விபத்துகளை தடுக்கும் வகையில் அருகருகே 3 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சேரன் நகர், வடக்கிபாளையம் பிரிவு பகுதிகளில் பிளாஸ்டிக் மூலம் மேலும் ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வேகத்தடைகள் இருப்பது இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

இரவு நேரத்தில் ஆபத்து

பொள்ளாச்சி-கோவை சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். பொதுவாக விபத்துகளை தடுக்கதான் வேகத்தடை அமைக்கப்படும். ஆனால் கோவை சாலையில் வேகத்தடையால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக்கால் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வேகத்தடை இரவு நேரங்களில் தெரிவதில்லை. இதனால் நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் இருசக்கர வாகனங்களால் அருகில் வந்ததும் பிரேக் போட முடியவில்லை.இது அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே உடனடியாக வேகத்தடையை அகற்ற வேண்டும். மேலும் சேரன் நகரில் வளைவான பகுதியில் நிலம் கையகப்படுத்தி சாலையை நேராக கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் விபத்துகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அகற்ற நடவடிக்கை

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சேரன் நகர், வடக்கிபாளையம் பிரிவு பகுதிகளில் புதிதாக வேகத்தடை அமைத்து உள்ளனர். அந்த வேகத்தடை பகல் நேரங்களில் வரும் வாகனங்களுக்கு தெரிகிறது. இதனால் விபத்துகள் பகலில் நடைபெறுவது குறைந்து உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் தெரிவதில்லை. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அந்த வேகத்தடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story