ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி
வாணியம்பாடியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில கட்டிட தொழிலாளியை காப்பாற்ற அவரது மனைவி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். ஆனாலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை,
வாணியம்பாடியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில கட்டிட தொழிலாளியை காப்பாற்ற அவரது மனைவி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். ஆனாலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கட்டிட தொழிலாளி
அருணாச்சல பிரதேச மாநிலம் நம்சாய் பகுதியில் உள்ள நம்சாய் பிளாக் பகுதியை சேர்ந்தவர் பதம் பகதூர் தாபா (வயது 54), கட்டிட வேலை செய்து வந்தார். இவர் தனது மனைவி சங்கீதா மாயா தாபா உள்பட குடும்பத்தினர் 3 பேருடன் கேரள மாநிலம் செங்கன்னூர் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார்.இதற்காக அருணாச்சல பிரதேச மாநிலம் நியூதின் சுக்கியா ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் செங்கன்னூர் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தனர்.
தவறி விழுந்தார்
நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சங்கிலி குப்பம் என்ற இடத்தில் ரெயில் சென்றபோது திடீரென பதம் பகதூர் தாபா ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர். அதற்குள் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே வந்துவிட்டது. அப்போது அவரது மனைவி ரெயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினாா்.
ரெயில் நின்றதும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் ரெயிலில் இருந்து இறங்கினர். அதன் பிறகு ரெயில் கேரளா நோக்கி புறப்பட்டது.
சாவு
பிறகு வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சங்கிலி குப்பம் பகுதி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று தனது கணவரை பார்த்த போது அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியும் தனது கணவரை காப்பாற்ற முடியவில்லையே என அவரது மனைவி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.