குடும்பத்துடன் பெண் தர்ணா
மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தர்ணா கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் தாலுக்கா ராவுத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா. இவருக்கு பவுஜியா, சுனயா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
இந்த நிலையில் ஜான்பாஷா தனக்கு ஒரே மகள் சுனயாதான் என்று வாரிசு சான்றிதழ் பெற்று தனது பெயரில் உள்ள 11 ஏக்கர் நிலைத்தையும் சுனயாவுக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பவுஜியா பேகம் பொய்யான வாரிசு சான்று மூலம் உயில் மற்றும் தான செட்டில்மெண்ட் ஆவணங்களை ரத்து செய்ய கோரியும், வடபொன்பரப்பி சார் பதிவாளர் மற்றும் ஆவண எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளரிடம் கடந்த 3-2-2022 அன்று மனு கொடுத்தார். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பவுஜியா பேகம் உயில், தானசெட்டில்மெண்ட் ஆகிய 2 ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு பவுஜியா பேகம் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுக்க கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட பவுஜியாபேகம் மாவட்ட பதிவாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து குடும்பத்ததுடன் புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.