தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி;ஒருவர் படுகாயம்


தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி;ஒருவர் படுகாயம்
x

தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி;ஒருவர் படுகாயம்

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி, ஜூலை

கோவை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தனியார் நிறுவன பெண் ஊழியர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சி செரயாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி மோகனா (வயது47). இவர் வெள்ளானைப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட போது மோகனா, தன்னுடன்வேலைப்பார்க்கும் குணசேகரன் என்பவரிடம் லிப்ட் கேட்டு, அந்த வழியாகத்தானே செல்கிறீர்கள் என்னை வீட்டில் விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் குணசேகரன் மோகனாவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வெள்ளானைப்பட்டியிலிருந்து அரசூர் செல்லும் சாலையில் வந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் குணசேகரன் மற்றும் மோகனா ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மோகனா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குணசேகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில தொழிலாளியை தேடி வருகின்றனர்.

மற்றொரு விபத்தில் ஊழியர் சாவு

இதுபோல் கோவை கணபதியைசேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செல்வராஜ் (64). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் சத்தி சாலையில் குரும்பபாளையம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டெம்போ வேன் மோட்டார்சைக்கிளில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story