விஷம் குடித்து பெண் தற்கொலை
ஓசூர் அருகே தோழி தவறான தகவல் பரப்பியதால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மத்திகிரி
தோழிகள்
தேன்கனிக்கோட்டை தாலுகா தின்னமங்கலம் அருகே உள்ள இளையசந்திரம் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா. இவரது மனைவி லாவண்யா (வயது 30). கணவன்-மனைவி இருவரும் ஓசூர் அருகே அந்திவாடி குறிஞ்சி நகரில் வசித்து வந்தனர். லாவண்யாவின் வீட்டின் அருகில் லகுமம்மா என்பவர் வசித்து வந்தார். இவர்கள் 2 பேரும் தோழிகளாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் லகுமம்மா, லாவண்யாவின் நடத்தை குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தவறான தகவலை பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லாவண்யா நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முனிகிருஷ்ணப்பா மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.