திட்டக்குடி அருகே பெண் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
திட்டக்குடி அருகே பெண் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநத்தம்,
திட்டக்குடி அருகே உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவருடைய மனைவி சித்ரா(வயது 43). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். சிவா சவுதி அரேபியாவில் தங்கி தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சித்ரா வீட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். சிவா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிவா இதுபற்றி ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா தலைமையில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்ராவின் சகோதாரர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.