டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி


டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 4 July 2023 1:00 AM IST (Updated: 4 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதையொட்டி தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதையொட்டி தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

டெங்கு காய்ச்சல்

கோவையில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தநிலையில் இடிகரை பேரூராட்சி பகுதியில் உள்ள சன்ரைஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மைதீன் பீவி(52) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தடுப்பு பணி

ஏற்கனவே அதே பகுதியில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் ஒருவர், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து முன் கூட்டியே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனினும் அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். டெங்கு கொசுப்புழுக்களை ஒழிப்பதற்காக மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அபராதம்

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இடிகரை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகளவில் உள்ளன. பழைய டயர்கள், தேங்காய் சிரட்டை, குளிர்சாதன பெட்டிகளின் பின் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுற்றுப்புறத்தை மோசமாக வைத்து இருந்தால் முதற்கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் அடுத்தடுத்த ஆய்வுகளிலும், அதே நிலை நீடித்தால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story