சம்பா பயிருக்கு உரம் கிடைக்கவில்லை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டத்தில் சம்பா பயிருக்கு உரம் கிடைக்கவில்லை என குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
உரம் இல்லை
ஸ்ரீமுஷ்ணம் செல்வராஜ்:- ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பயிரை பராமரிக்க ஜிங் சல்பேட் உள்ளிட்ட உரங்கள் கிடைக்கவில்லை. அதனால் விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்மாபுரம் மதியழகன்:- எங்கள் பகுதியில் தற்போது சம்பா சாகுபடி செய்துள்ளோம். ஆனால் யூரியா உள்ளிட்ட எந்தவொரு உரங்களும் கிடைக்கவில்லை. தனியார் உரக்கடைகளுக்கு சென்று கேட்டால், ரசீது இல்லாமல் தான் கொடுப்போம் என கூறுகின்றனர். அதனால் கூட்டுறவு சங்கம் மூலம் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவாலக்குடி முருகானந்தன்:- ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவை விருத்தாசலம் வருவாய் கோட்டத்துடன் இணைக்க வேண்டும். விருத்தாசலம் பகுதியில் மின்துறைக்கு தேவையான பொருட்கள் உள்ள கிடங்கு அமைக்க வேண்டும் என்றார்.
காய்ந்த பயிர்களுக்கு நிவாரணம்
கடலூர் மாதவன்: ஆதனூர், குமாரமங்கலம் கதவணையில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்திட வேண்டும். கதவணை திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டங்களில் நேரடி விதைப்பு செய்த பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி காய்ந்து போனது. அந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். பயிர் காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. அரசு புதிய காப்பீடு நிறுவனத்தை உருவாக்கிட வேண்டும்.
அப்போது கலெக்டர், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும், தீர ஆராய்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள், மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.