கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு


கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு
x

கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடாக உள்ளது. எனவே தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் மணிலா அதிகளவில் பயிர் செய்யப்படுவதால் அதனை பயிரிடும் விவசாயிகளின் நலன் கருதி கோவில்பட்டிபோன்று நமது மாவட்டத்திலும் கடலைமிட்டாய் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இங்குள்ள சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தை நம்பி அதிகம் விவசாயம் செய்கின்றனர். ஆனால் சொட்டுநீர் பாசனம் கேட்டு மனு கொடுத்து 6 மாதமாகியும் இன்னும் பல விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. உடனே சொட்டுநீர் பாசனம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ரூ.20 கோடி பாக்கி

சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டைபாய்டு பரிசோதனை செய்யவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் மருந்து இல்லை என்கிறார்கள். சிறுவந்தாடு ஏரிக்கு செல்லும் வாய்க்காலை தூர்த்துவிட்டு சாலை அமைத்துள்ளனர். அந்த வாய்க்காலை கண்டுபிடித்து தூர்வாரி சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணம் ரூ.20 கோடி வரை பாக்கி உள்ளது. அவற்றை உடனடியாக மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும். தரமான விதைகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.

தளவானூர் அணைக்கட்டு எப்போது சீரமைக்கப்படும்? அதற்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும். சாத்தனூர் அணையில் தற்போது 102 அடியில் தண்ணீர் உள்ளது. அங்கு மழை பெய்து தண்ணீர் திறக்கப்பட்டால் அடுத்த நாளே தளவானூருக்கு தண்ணீர் வரும். ஆகவே தளவானூர் அணைக்கட்டை விரைந்து சீரமைக்க வேண்டும். குடிமராமத்து பணிகள் நடந்துள்ள ஏரிகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். அதுபோல் குடிமராமத்து பணிகள் நடந்துள்ள ஏரிகளில் வாய்க்கால், மதகுகளை முழுமையாக சீரமைத்து விட்டீர்களா? அங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளை அதிகம் உற்பத்தி செய்து சந்தை பகுதியில் விற்பனை செய்ய வேண்டும். அதுபோல் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் விற்பனை செய்தால் மக்கள் அதிகம் வாங்கிச்செல்வார்கள், அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உரம் தட்டுப்பாடு

திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு வர வேண்டிய பணம் ஒரு மாதமாகியும் இன்னும் வரவில்லை. கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடாக உள்ளது. சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு தடையின்றியும், தட்டுப்பாடின்றியும் உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தனியார் உரக்கடைகளில் யூரியா உரத்தை வைத்துக்கொண்டே இல்லை என்கிறார்கள்.

கால்நடைகளுக்கு குடற்புழு நோய் தாக்குதல் இருப்பதால் தேவையான மருந்துகளை அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் இருக்க செய்ய வேண்டும். நந்தன் கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தற்போது மழைக்காலம் வர உள்ளதால் ஏரி வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரம்மதேசத்தில் உள்ள கூட்டுறவு சங்கம் கடந்த 10 ஆண்டுகளாக சரிவர செயல்படாமல் உள்ளது. அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உப்புவேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் டாக்டர் சரிவர வருவதில்லை. பிரம்மதேசத்தில் மின்வேலியில் சிக்கி 3 பேர் இறந்துள்ளனர். இனி இதுபோன்ற துயர சம்பவம் ஏற்படாதவாறு காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தில் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற வனத்துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி, விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.


Next Story