பாலக்கோட்டில்தேவகிரி முனியப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவகிரி முனியப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான நேற்று அதிகாலை முதலே பல்வேறு திரவியங்களால் சாமிக்கு அபிஷேகம், கோபூஜை, 2-ம் கால யாகபூஜை, நாடி சந்தானம், பஞ்சசூக்த பாராயணம், திரவிய மகா ஹோமம் நடந்தது.
இதையடுத்து ஊர் கவுண்டர் ஓபுளி கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் சிவாச்சாரியார்கள் தலையில் தீர்த்தகுடம் எடுத்து சென்று முனியப்ப சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் செய்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்தனர்.
பின்னர் பக்தர்கள் ஆடு, கோழி, பன்றிகள் பலியிட்டு முப்பூஜை செய்தும், பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாவிளக்கு, தீர்த்தக்குடம் எடுத்து தங்களது வேன்டுதலை நிறைவேற்றினர். இதனை தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.