மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்


மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
x

மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

அலங்காநல்லூர்,

தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஆடித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தன.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி-பூமிதேவி சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாளுக்கு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். நாளை மறுநாள் (6-தேதி) வழக்கம் போல் காலை நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்தில் புறப்பாடும், 7-ந் தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 8-ந்தேதி காலையில் 6.45 மணிக்கு மேல 7.15 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று தங்க பல்லக்கில் எழுந்தருளிகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 9-ந்தேதி இரவு யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

10-ந் தேதி இரவு புஷ்ப சப்பரமும், 11-ந் தேதி இரவு தங்ககுதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளிகிறார்.

தொடர்ந்து 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அன்று இரவு பூப்பல்லாக்கும், 13ம் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story