நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிழா


ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மித்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

நித்திய சுமங்கலி மாரியம்மன்

ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி ஊர்வலம் சென்றது.

கடந்த 31-ந் தேதி பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் அம்மை அழைத்தல் நடந்தது. பின்னர் காலை முதல் இரவு வரை நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து நேற்று அதிகாலையில் தீமிதி விழா நடந்தது.

தீ மிதித்தனர்

விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிவித்தும், கையில் வேப்பிலையுடனும் தீ மிதித்தனர். சில பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையுடன் தீ மிதித்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) வண்டி வேடிக்கை நடக்கிறது. பின்னர் நாளை (சனிக்கிழமை) இரவு மாரியம்மன் சாமி வர்ண விளக்கு ஜோடனை மற்றும் வாண வேடிக்கையுடன் புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல், சத்தாபரணம் நடக்கிறது. ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story