உடுமலை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள்


உடுமலை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள்
x

உடுமலை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்

உடுமலை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாவிளக்கு

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இதில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்துகொள்வது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு தீர்த்தக் குடங்களுடன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விஷேச பூஜை நடத்தப்பட்டு வருகிறது. கோவிலில் கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர், மஞ்சள் நீர், பால் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து வழிபாடு மேற்கொண்டனர்.

திருக்கல்யாணம்

நேற்று மாலை கோவில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும் என்பது முன்னோர் வாக்கு. அதனடிப்படையில் மாலையில் நடக்கும் மாரியம்மன் திருக்கல்யாண வைபவத்தில் திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் ஆக வேண்டி ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.அம்மையும் அப்பனுமாக சூலத்தேவர் சமேதராக எழுந்தருளிய மாரியம்மன் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மஞ்சள் இடித்தல், ஹோமம், மாலை மாற்றுதல், பூப்பந்து உருட்டுதல் உள்ளிட்ட வழக்கமான திருமணச் சடங்குகளுடன் மாரியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தாலிக்கயிறு

விழாவின் நிறைவாக பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் இரவு அம்மன் புஷ்ப அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இன்று (வியாழன்) காலை அம்மன் திருத்தேரில் எழுந்தருள்வார். மாலை 4.15 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story