காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அறிவுறுத்தல்


காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 Sep 2023 7:00 PM GMT (Updated: 29 Sep 2023 7:01 PM GMT)
தர்மபுரி

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என தர்மபுரி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.

டெங்கு காய்ச்சல்

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவோர் எண்ணிக்கையும் வழக்கத்தை விட சற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலட்சியம் கூடாது

இதுகுறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் சில இடங்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது. வீட்டில் உள்ள மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்து கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சுய சிகிச்சை செய்யும்போது ஓரிரு நாட்கள் உடலில் சிரமங்களை அந்த சிகிச்சை மட்டுப்படுத்தும்.

ஆனால் அதற்குள் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே காய்ச்சல் மற்றும் தொடர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். காய்ச்சலை அலட்சியப்படுத்தினால் டெங்கு காய்ச்சலின் வீரியம் அதிகரித்து அது உடல்நிலையை பெரிதாக பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story