களப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


களப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

களப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி

மின் ஊழியர் படுகாயம்

திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ்காந்தி என்பவர் களப்பணியாளராக (கேங்மேன்) பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று திருச்சி 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அதிக மின்சாரம் செல்லும் மின்பாதையில் ஒரு பகுதியில் மின்சாரம் செல்லும்போது, மற்றொரு பகுதியில் இவரை பணி செய்ய மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி இவர் பணி செய்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். களப்பணியாளர்களை அதிக மின்னோட்டம் உள்ள பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற விதிக்கு புறம்பாக அதிகாரிகள் பணி செய்ய வற்புறுத்தியதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

இதனால் இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார்.

தொழிலாளர் கூட்டமைப்பு சிவசெல்வம், ஐக்கிய சங்க ஆலயமணி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

காத்திருப்பு போராட்டம்

அதே நேரம் திருச்சியில் நகரிய கோட்டத்தில் பணியாற்றும் களப்பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள், களப்பணியாளர் ராஜீவ்காந்தியை விதிகளுக்கு புறம்பாக பணியாற்ற வைத்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். விதிகளுக்கு புறம்பாக பணி வழங்கக்கூடாது. பணியின்போது விபத்து ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பாரதீய மின்சார ஊழியர் கூட்டமைப்பு மாநில செயலாளர் ரமேஷ்கண்ணன், திட்ட செயலாளர் சுகுமார், அலுவலர் சங்க துணைப்பொதுச்செயலாளர் தேவராஜ், கேங்மேன் சங்க மாநில தலைவர் முத்து ஆகியோர் கலந்து கொண்டு கேங்மேன்கள் சார்பில் அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 5 மணிக்கு மேலும் போராட்டம் தொடர்ந்ததால் மின்பணிகளும் பாதிக்கப்பட்டன.

பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்படி, உதவி மின்பொறியாளர் ஆர்.சரவணனை பணியிடை நீக்கம் செய்து செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் மாலையில் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து களப்பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story