கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு மாணவர்களிடையே கடும் போட்டி- 70 இடங்களுக்கு 5,200 பேர் விண்ணப்பம்
அனைத்து கலை கல்லூரிகளிலும் பி.காம் படிப்புக்கு இடம் பிடிக்க மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நடைபெறுகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை நாடி செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கான முடிவுகள் வெளியான நாளில் இருந்து இதுவரை சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் கல்லூரிகளுக்கு செல்பவர்களை விட கலை கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதிலும் வழக்கம் போல இந்த ஆண்டும் பி.காம் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் அதிக மோகம் இருக்கிறது. அனைத்து கலை கல்லூரிகளிலும் பி.காம் படிப்புக்கு இடம் பிடிக்க மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நடைபெறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பி.காம். (ஜெனரல்), பி.காம் (கார்ப்பரேட் செகரட்டரி ஷிப்) ஆகிய படிப்புகளுக்கு இந்த ஆண்டு இரட்டிப்பு மடங்கு மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இதனால் பி.காம் படிப்புக்கு இடம் கிடைக்குமா? என்பதில் பெரும்பாலான மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து மாணவர்களின் கவனம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு மீது திரும்பியிருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படிப்பதற்காக அதிக அளவு மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். குறிப்பாக மாணவிகள் மத்தியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மோகம் அதிகமாக உள்ளது. இதனால் மகளிர் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு பல மடங்கு அதிகரித்து உள்ளது.
உதாரணத்துக்கு எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 70 இடங்கள் உள்ளன. இதுவரை அந்த 70 இடங்களுக்கு 5,239 மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் இடத்துக்கு 75 மாணவிகள் பலப்பரீட்சை நடத்தும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. பி.காம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு கடும் மோதல் இருப்பதால் அதற்கடுத்து முக்கியத்துவம் உள்ள படிப்புகளிலும் மாணவ, மாணவிகளின் கவனம் திரும்பியுள்ளது.
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ., பி.ஏ. ஆங்கிலம் படிப்புகளுக்கும் அதிக மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். குருநானக் கல்லூரியில் பி.ஏ. (பாதுகாப்பு கல்வி), பி.எஸ்சி (விலங்கியல்) அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ. (அரசியல் கலை), பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. (பொருளாதாரம்) படிப்புகளுக்கும் அதிக மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. (ஆங்கிலம்), பி.எஸ்சி (உளவியல்) படிப்புக்கு அதிகம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதற்கிடையே சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் 10 தினங்களில் வர உள்ளன. அதுவரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவு செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியானதும் கல்லூரிகளில் இடத்துக்கு மோதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.