ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது..!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இடைத்தேர்தல் இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் பல்வேறு அரசியில் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவிய தொடங்கி உள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் வேட்புமனுவாக தேர்தல் மன்னன் பத்மராஜன் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பொதுப்பிரிவு வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது.