திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்
திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினருமான வி.ஏ. துரை நேற்றிரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வி.ஏ. துரை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எனது நடிப்பில் வெளியான கஜேந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் வி.ஏ. துரை. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.