இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்:அரசு ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு விழா எப்போது?


இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்:அரசு ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு விழா எப்போது?
x

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டு வரும், 23 அறுவை சிகிச்சை வளாக பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், விரைவில் திறப்பு விழா நடக்க இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மதுரை


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டு வரும், 23 அறுவை சிகிச்சை வளாக பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், விரைவில் திறப்பு விழா நடக்க இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி

மதுரை அரசு ஆஸ்பத்திரியானது, தென் மாவட்ட மக்களின் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இங்கு மதுரை மட்டுமின்றி மதுரையை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுபோல், ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுஒரு புறம் இருக்க, அண்ணாநகர் பஸ் நிலையம் எதிரே, சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் மூளை நரம்பியல், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை, ரத்த நாளங்கள் துறை, குடல் மற்றும் இரைப்பை மருந்தியல் துறை, குடல் மற்றும் இரப்பை அறுவை சிகிச்சை துறை என 7 உயிர்காக்கும் நவீன பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அதன் எதிரில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, எலும்பு வங்கி என பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது.

அறுவை சிகிச்சை அரங்கங்கள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த அறுவைச்சிகிச்சைக்கூடமானது மிகவும் பழமையானது. அங்கு குறைந்த எண்ணிகையில் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும். எனவே, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த புதிய அறுவைச்சிகிச்சை வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்தது. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. உள்பக்க பணிகள் முடிந்து, வெளிபுறத்தில் பெயர் பலகை உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

திறப்பு விழா எப்போது?

இதற்கு திறப்பு விழா எப்போது என்பது குறித்து டாக்டர்கள் கூறுகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள அறுவை சிகிச்சை வளாகம் தரை தளத்துடன் சேர்த்து 7 தளங்கள் கொண்டது. 23 அறுவைச்சிகிச்சை அரங்குகள் அமைகிறது. கட்டிட பணிகளுக்காக மட்டும் ரூ.121 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்களும் ரூ.100 கோடிக்கு மேல் செலவிடப்பட இருக்கிறது. ஓரளவு பணிகள் நிறைவு பெற்று விட்டன. பொதுப்பணித்துறையினர் கட்டிடத்தை, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்த பின்னர் மருத்துவ கருவிகள், படுக்கைகள் போன்றவை அங்கு அமைக்கப்படும். அதன்பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.

இந்த மாத இறுதியில் பொதுப்பணித்துறையினர் வளாகத்தை ஒப்படைப்பதாக கூறியிருக்கிறார்கள். அப்படி ஒப்படைத்து விட்டால், அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது 2-ந்தேதி திறப்பு விழா நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story