நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதிஉதவி


நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதிஉதவி
x

நாமக்கல் மாவட்டத்தில் 10 பேர் கொண்ட குழுவிற்கு நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

நவீன சலவையகம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக 10 நபர்களை கொண்ட குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த குறைந்தபட்சம் 10 நபர்கள் கொண்ட குழுவாக அமைத்து, நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம்.

பரிந்துரை செய்யப்படும்

அவ்வாறு பெறப்படும் விண்ணப்ப படிவங்களில் கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னைக்கு பரிந்துரை செய்யப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.

குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story