மாணவிகளுக்கு நிதி உதவி


மாணவிகளுக்கு நிதி உதவி
x

சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காந்திநகர் கீழ 4-ம் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (34). இவர்களுக்கு கலாராணி, வாணிஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த மே மாதம் 23-ந் தேதி முத்துமாரி ஆடு மேய்ப்பதற்காக சங்கரன்கோவில்- கழுகுமலை ரோடு, திருவேங்கடம் ரோடு இணைப்பு சாலையில் சென்றபோது கார் மோதிய விபத்தில் இறந்தார்.

முத்துமாரி இறந்த மறுநாளில் 2 மகள்களுக்கும் 10-ம் வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது. எனவே மனைவி இறந்த தகவலை 2 மகள்களுக்கும் தெரிவிக்காத பெரியசாமி, மகள்களை பாட்டி வீட்டில் தங்க வைத்து மறுநாள் கணித தேர்வு எழுத அனுப்பினார். தாய் இறந்ததை அறியாமல் தேர்வெழுதிய கலாராணி 358 மதிப்பெண்களும், வாணிஸ்ரீ 433 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சியடைந்து, சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க. மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதா அஜய் மகேஷ்குமார் ஏற்பாட்டில், தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பெரியசாமியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி, மாணவிகளின் கல்வி செலவுக்காக ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், நகர நிர்வாகி பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story