நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் குடும்பத்திற்கு நிதி உதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் குடும்பத்திற்கு நிதி உதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

ராசிபுரம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளது.

சென்னை,

நாமக்கல் மாவட்டத்தில் நீச்சல் பழகச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவியை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கட்டநாச்சம்பட்டி கிராமம், அத்திப்பழகானூரில் வசித்துவரும் கணேசன்-வெண்ணிலா தம்பதியினரின் மகள் க. ஜனனி (வயது 14) மற்றும் கண்ணன்-தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகள் க.ரச்சனா ஸ்ரீ (வயது 15) ஆகிய 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அருகிலுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

மகள்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story