தூத்துக்குடி தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடி தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம், தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாரியம்மாள், க/பெ.தங்கவேல் (லேட்) (வயது 70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கனகராஜேஸ்வரி, க/பெ.காட்டு ராஜா (லேட்) (வயது 49) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.