மதுரையில் குழாய் பதிக்கும் பணியின் போது உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மதுரையில் குழாய் பதிக்கும் பணியின்போது உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று (7.11.2022) மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில்
புதைந்துள்ளது. இச்சம்பவத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த திரு.சக்திவேல் (வயது 30) என்பவர் பள்ளத்தில் சிக்கி, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், மூன்று மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தியினைக் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.