நிதி நிறுவன ஊழியர் கடத்தல் வழக்கில்நிதி நிறுவன உரிமையாளர் கைது
நிதி நிறுவன ஊழியர் கடத்தல் வழக்கில் அந்த நிதி நிறுவன உரிமையாளரை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி
நிதி நிறுவன ஊழியர் கடத்தல் வழக்கில் அந்த நிதி நிறுவன உரிமையாளரை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவனம்
செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31). இவர் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தின் வந்தவாசி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த மார்ச் 25-ஆம் தேதி வசூலான ரூ.16.55 லட்சத்தை எடுத்துக் கொண்டு இரவு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி-செய்யாறு சாலையில், புலிவாய் கூட்டுச்சாலை அருகே சென்றபோது 2 கார்களில் வந்த 7 பேர் மணிமாறனை வழிமடக்கி காரில் கடத்திச் சென்றனர். தகவலறிந்த ஆரணி மற்றும் வந்தவாசி வடக்கு போலீசார் இரு கார்களையும் மடக்கி மணிமாறனை மீட்டனர்.
பணத்துடன் ஓட்டம்
அப்போது காரிலிருந்த 7 பேரில் 4 பேர் ரூ.6.17 லட்சம் பணத்துடன் தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செயத விசாரணையின் அடிப்படையில் செய்யாறை அடுத்த ஜடேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு (21), செய்யாறை அடுத்த பெரும்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (24), ஆரணியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (55) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மீதி பணம் ரூ.10.38 லட்சத்தையும், இரு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய 4 பேரை தேடி வந்த போலீசார், இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளரான செய்யாறு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த வஹாப் மகன் அல்தாப் தாசிப் (34) என்பவரை அவரது வீட்டில் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மணிமாறன், தங்கவேலு, அஜித்குமார் ஆகிய 3 பேரும் அந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இதில் மணிமாறன் நிதி நிறுவனத்தின் முக்கிய தகவல்களை வெவ்வேறு நபர்களுக்கு தெரிவித்து வநதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அல்தாப் தாசிப், மணிமாறனை கடத்தி மிரட்டும்படி கூறியுள்ளார். எனவே இந்த கடத்தல் வழக்கில் உரிமையாளர் அல்தாப்தாசிரை கைது செய்துள்ளோம். மருத்துவ பரிசோதனைக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றனர்